ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

மதுரை: ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த ஆதிசிவம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திரைப்படங்களில் ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள் இருப்பின் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் தணிக்கை செய்து இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் வெளியிடும். தற்போது இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது.

ஓடிடி தளத்தில் வௌியாகும் சினிமா, வெப் சீரியஸ்கள், தொடர்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் போன்றவை எவ்விதமான தணிக்கையுமின்றி ஒளிபரப்பப்படுகின்றன. 2018ம் ஆண்டில் 2.4 பில்லியன் பேர் ஓடிடி தளத்தை பயன்படுத்தியுள்ளனர். அதே நேரம் 2027ல் அது 4.2 பில்லியன் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளால் இளம் தலைமுறையினர் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே, ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியஸ்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் மனுவிற்கு ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலை தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: