கோயம்பேடு சந்தையை நவீன மயமாக்கும் பணிகள் 200 டன் கழிவுகளில் பயோ காஸ் உற்பத்தி செய்ய திட்டம்

* சென்னை அருகே 2 கிடங்குகள் அமைக்க இடம் தேர்வு
* வாழைத்தாரை மறுசுழற்சி செய்ய டெண்டர்
* கார்பன் சமநிலையை உருவாக்க திட்ட அறிக்கை

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள், பூ வியாபாரிகள், பொதுமக்கள் என தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், பொருட்களை கொள்முதல் செய்ய வரும் சில்லரை வியாபாரிகளின் வாகனங்கள் என தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கோயம்பேடு சந்தை வளாகத்திற்கு வந்து செல்கின்றன. தமிழ்நாட்டில் மிகப்பெரிய வணிகத் தளமாக விளங்கும் கோயம்பேடு சந்தையில் மட்டும் 3941 அங்கீகரிக்கப்பட்ட கடைகள் உள்ளன. இதில் 1985 காய்கறி கடைகள், 992 பழக்கடைகள், 472 பூக்கடைகள், 472 இதர கடைகள் உள்ளன. இதுதவிர சாலையோரங்களில் சில்லரை வியாபாரிகளும் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புக்குரிய கோயம்பேடு சந்தையை, நவீன மயமாக்கல் செய்து சீரமைக்கும் வண்ணம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அங்காடி நிர்வாக குழு மூலம், அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் மூலம் பணிகள் செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சந்தை வளாகத்தில் மழைநீர் வடிகால்கள், சாலைகள் மற்றும் கழிவறைகளை சீரமைப்பது, மின் விளக்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை பிரச்னைகளை சரி செய்து சந்தை வளாகத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், கோயம்பேடு சந்தையை நவீனப்படுத்த சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ, மாசுக் கட்டுபாட்டு வாரியம் மற்றும் அங்காடி நிர்வாக குழு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள்: அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிமம் பெற்ற கடை வியாபாரிகள் அனைவருக்கும் கடை எண் பொறிக்கப்பட்ட ‘‘ஸ்மார்ட் கார்டு’’ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன் ஒருபகுதியாக பழக்கடை வியாபாரிகளுக்கு இந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், காய்கறி கடை வியாபாரிகளுக்கு தற்போது இந்த அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கணினி மயமாக்கப்பட்ட நுழைவு வாயில்கள்: அதேபோல், சந்தை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில்கள் அனைத்தும் கணினி முறையில் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு முதற்கட்டமாக காய்கறி கடைக்கு செல்லும் நுழைவாயில் எண் 7 மற்றும் 14, அதேபோல் பழக்கடைக்கு செல்லும் நுழைவாயிலான எண் 3 மற்றும் 18 ஆகியவை கணினி மயமாக்கப்பட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன.

இதனால் கடை இல்லாத வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இனி சந்தை வளாகத்தில் எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்து நுழைவு வாயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி சரக்குகள் 6500 டன்கள்: கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை தினசரி 6,500 டன் சரக்குகள் வரை வியாபாரிகளால் கையாளப்படுகின்றன. இதில், 200 டன் வரை நாள்தோறும் கழிவுப்பொருட்களாக கொட்டப்படுகின்றன. அதுவே, தீபாவளி, ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 280 முதல் 300 டன் வரை கழிவுப்பொருட்கள் தேங்குவதாக கூறப்படுகிறது. உற்பத்தி கிடங்குகளுக்கு இடம் தேர்வு: அந்தவகையில் வளாகத்தில் தினசரி தேங்கும் 200 டன் கழிவுகளில் 25 டன் காய்கறி கழிவுகளை, சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று “பயோகாஸ்” எனப்படும் ‘உயிரி எரிவாயு’ உற்பத்தி செய்வதற்கு காய்கறி மொத்த வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றன.

மீதமுள்ள கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அதற்கும் தீர்வு காணும் வகையில் சென்னையில் மேலும் 2 இடங்களில் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி கூறுகையில், சந்தையில் தேக்கமடையும் காய்கறி மற்றும் பழம் போன்ற கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தோம். அதன்படி, தற்போது கோயம்பேடு அருகிலேயே குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கழிவுப் பொருட்களை கொண்டு “பயோ காஸ்” உற்பத்தி செய்வதற்கான கிடக்கு அமைப்பதற்கு 2 இடங்களை தேர்வு செய்துள்ளோம். இந்த பணிகள் என்பது மாநகராட்சியால் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

வீணாகும் பூக்களை கொண்டு அகர்பத்தி
கோயம்பேட்டில் அதிகம் தேக்கமடையும் கழிவுகளில் வாழைத்தார் பிரதானமாக உள்ளது. சந்தை உருவாக்கம் என்பதால் அனைத்து வகையான கழிவுகளையும் “பயோமெத்தனேஷன்” ஆலையில் போட முடியாது. இதன் காரணமாகத்தான், வாழைத்தாரை மறுசுழற்சி செய்வதற்கான டெண்டர், அங்காடி நிர்வாக குழுவால் (எம்.எம்.சி) வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், பூ மார்க்கெட்டில் வீணாகும் பூக்களை கொண்டு மறுமணம் கொண்ட அகர்பத்திகள் தயாரிப்பதற்கான நிறுவனங்களுக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சள் பை மிஷின்கள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மஞ்சள் பை திட்டம்” கொண்டு வரப்பட்டது. காய்கறிகள், பழங்களை வாங்க சந்தைக்கு வருவோர், ”பிளாஸ்டிக் கேரி பேக்குகளை” பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கு பதிலாக “துணிப்பைகளை” பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கோயம்பேடு சந்தை நவீனமயமாக்கலை தொடர்ந்து தற்போது 5 இயந்திரங்கள் மூலமாக துணிப் பைகளை தருவித்து, அதன் மூலம் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

மாசில்லா சந்தையை உருவாக்க ஐஐடி குழு அறிக்கை
கோயம்பேடு சந்தையை “கார்பன் நியூட்ரலாக” மாற்றுவதற்கான பணிகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ10 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு பிளாஸ்டிக் இல்லாத மற்றும் கார்பன் நடுநிலை சந்தையை உருவாக்க செய்ய விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி ஐஐடி குழுவினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழிவு மேலாண்மை, நீர் வழங்கல், சுகாதாரம், மழைநீர் மேலாண்மை, கட்டுமான கட்டமைப்புகள், பொறியியல் நிலைத்தன்மை, ஆற்றல் பயன்பாடு, கார்பன் தடம், போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை கொண்டு கார்பன் சமநிலையை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக எம்.எம்.சி. அதிகாரி தெரிவிக்கிறார்.

The post கோயம்பேடு சந்தையை நவீன மயமாக்கும் பணிகள் 200 டன் கழிவுகளில் பயோ காஸ் உற்பத்தி செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: