நிகழ்வுகளை நினைவுகளாக மாற்றுவதுதான் எங்கள் வேலை!

நன்றி குங்குமம் தோழி

நம் வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் எல்லோருடைய நினைவிலும் நீங்காமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். அதில் முக்கியமாக அந்த நிகழ்வுகள் தனித்து இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காகவே ஒவ்வொன்றிலும் சிறந்த விஷயங்களை ஒருங்கிணைத்து கவனமாக பார்த்து பார்த்து செய்வோம். வீட்டில் உள்ள அனைத்து உறவினர்களும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டு அந்த நிகழ்வினை அசத்தலாக செய்து முடிப்பார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் திருமணமே என்றாலும், அதில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்த்துக் ெகாள்ளவே ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நம் விருப்பங்கள் மற்றும் தேவைகளை இவர்களிடம் சொல்லிவிட்டால் போதும், அதை அனைத்துமே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிகழ்வினையும் அழகாக ஒருங்கிணைத்து கொடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த ‘கிரியேட்டிவ் மைண்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் செளம்யா. திருமணம், பிறந்த நாள் விழாக்கள் என எல்லாவற்றையும் வெற்றிகரமாக செயல்படுத்தி ஒரு தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார்.

‘‘படிச்சது நர்சிங். அந்த துறையில் சில காலம் வேலை பார்த்து வந்தேன். இதற்கிடையில் திருமணமானது. அதன் பிறகும் நான் என்னுடைய வேலையை செய்து வந்தேன். எனக்கு முதல் குழந்தை பிறக்க இருந்த சமயத்தில் என்னால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் பார்த்த வேலையினை ராஜினாமா செய்துவிட்டேன். அதன் பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், என்னால் மீண்டும் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அவர்கள் கொஞ்சம் பெரியதான பிறகு, ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன். எனக்கு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க பிடிக்கும். எங்க ஏரியாவில் நடைபெறும் நிகழ்ச்சியினை நான் தொகுத்து வழங்கி இருக்கேன். அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சியில் செய்யப்படும் அலங்காரத்தில் நான் அதிகம் கவனம் செலுத்துவேன். அலங்காரம் செய்ய வருபவர்களிடம் என்னுடைய யோசனையையும் சொல்வேன். அவர்களும் என்னுடைய கருத்துக்கு மதிப்பு அளித்து அதை செய்து தருவார்கள். அவர்கள்தான் இதையே ஏன் நீங்க ஒரு தொழிலாக செய்யக்கூடாதுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. என் கணவரிடம் இது குறித்து பேசினேன்.

அவரும் ஊக்கமளிக்கவே என் மாமியாரும் மற்றும் என் அம்மாவும் எனக்கு இந்த தொழில் துவங்க மிகவும் உதவினார். இவர்கள் அளித்த ஊக்கத்தினால்தான் நான் இந்த தொழிலை செய்யத் தொடங்கினேன்’’ என்றவர் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து உள்ளார். ‘‘நான் ெதாழில் ஆரம்பித்த காலகட்டங்களில் பலூன்களின் மூலம்தான் ஒரு நிகழ்ச்சிக்கு டெக்ரேசன் செய்வார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றால், அவர்களின் புகைப்படங்களை பிரின்ட் எடுத்து அதில் வண்ண விளக்குகளை மாட்டி செட் செய்வது வழக்கம். இதை நான் மாற்றி அமைத்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்ப அதனை எவ்வாறு டிசைன் செய்யலாம் என்று திட்டமிட ஆரம்பித்தேன்.

அதில் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தீம் நிறங்களில் உடை உடுத்த சொல்வேன். அதற்கு ஏற்பதான் அலங்காரம் அமைக்கப்படும். இது போல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்க ஆரம்பித்தேன். மேலும் முன்பே திட்டமிடுவதால், சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்ய எனக்கு வசதியாக இருந்தது. அதுவே பலருக்கு பிடித்து இருந்தது. மேலும் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கும் மறக்க முடியாத நினைவாக இருந்தது.

இந்த மாதிரிதான் என்னிடம் வரும் வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுடைய நிகழ்ச்சிகள் புதுவிதமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் பலவிதமான டிசைன்களில் புதுப்புது இடங்களில் தங்களுடைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் நாங்களும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் புது மாதிரியான டெக்ரேசன்களையே செய்து வருகிறோம். எனக்கு ஓவியம் வரைவது மற்றும் சின்னச் சின்ன கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஆர்வம் இருந்ததால், அதனையும் நான் என்னுடைய தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டேன். நிகழ்ச்சிக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் முதலில் பேசுவேன்.

அதன் மூலம் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்வேன். அதை என்னால் செய்ய முடியும் என்றால் அதை நானே வடிவமைப்பேன். அது தனித்துவமாக இருக்கும். ஆரம்பத்தில் நான் மட்டும்தான் சிறிய அளவில் செய்து வந்தேன். இப்போது என்னுடைய இந்த நிறுவனத்தில் 21 பேர் வேலை செய்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த தேவையான அனைத்து கலைஞர்களும், பொருட்களும் உண்டு. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து முழு நிகழ்ச்சியை நாங்களே செய்து தரவும் தொடங்கினோம். இந்த மாதிரி முழு நிகழ்ச்சியையும் நாங்களே எடுத்து பண்ணும் போது அனைத்து வேலைகளும் ஒன்று போலவே நடக்கும்.

அப்போதுதான் ஒரு நிகழ்ச்சியினை சரியாக செயல்படுத்த முடியும். உதாரணமாக ஒரு கல்யாணம் என்றால் அதில் எல்லாவற்றையுமே நாங்களே செய்து தருகிறோம். கல்யாண வீட்டார் திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்தினால் மட்டுமே போதும். அந்த அளவிற்கு மண்டப அலங்காரம் முதல் உணவு, புகைப்படம் வரை எல்லா வேலைகளையுமே நாங்களே கவனித்துக் கொள்வோம். இப்போது நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளையுமே இப்படி தான் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். இந்த மாதிரி ஒருங்கிணைப்பதையே பல வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். இந்த வருடத்தில் மட்டுமே நாங்கள் 130க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

எனக்கு வரும் ஆர்டர்கள் எல்லாமே நான் செய்த எல்லாவற்றையுமே பார்த்தவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களிடம் என்னுடைய வேலைகளை பற்றி சொல்லிதான் எனக்கு புதிதான ஆர்டர்கள் வருகின்றன. சில வாடிக்கையாளர்கள் அவர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிக்கும் என்னைதான் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் என் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. வாடிக்கையாளர்களிடம் நான் வாங்கும் பணத்திற்கு ஏற்ப நான் செய்யும் வேலைகளும் மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய முடியும்’’ என மகிழ்ச்சியோடு சொல்கிறார் செளம்யா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post நிகழ்வுகளை நினைவுகளாக மாற்றுவதுதான் எங்கள் வேலை! appeared first on Dinakaran.

Related Stories: