பாட்னா: பீகாரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த நிதிஷ்குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பாஜவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.
243 தொகுதிகளில் பாஜ 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை கைப்பற்றி 2ம் இடத்தை பிடித்தது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டும் வென்று தோல்வி அடைந்தது. தேர்தல் வெற்றிக்கு பிறகு பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில், மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். விரைவிலேயே நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ஆட்சி அமைத்த 5 மாதங்களில் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக செல்வதாக அறிவித்தார்.
இதுவரை பீகார் சட்டப்பேரவை, மேலவை, மக்களவை உறுப்பினர், ஒன்றிய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என நிதிஷ்குமார் கூறினார். அதன்படி சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ்குமார், கடந்த 10ம் தேதி எம்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று காலை அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பாஜ சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை நேற்று பிற்பகலில் தொடங்கியது.
இதற்கான மத்திய பார்வையாளராக ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாஜ நாடாளுமன்ற வாரியத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். இதில், பாஜ சட்டப்பேரவை கட்சி தலைவராக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதன் மூலம் சாம்ராட் சவுத்ரி பீகாரின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பீகாரில் பலமுறை கூட்டணி ஆட்சியில் பாஜ அங்கம் வகித்தாலும், முதல் முறையாக அங்கு முதல்வர் பதவியில் பாஜ அமர இருக்கிறது.
முதல் பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைனை, சாம்ராட் சவுத்ரி சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது உரிமையை முறைப்படி கோரினார். தனது தேர்வு குறித்து சாம்ராட் சவுத்ரி எக்ஸ் பதிவில், ‘‘சட்டப்பேரவை கட்சி தலைவர் என்பது வெறும் பதவி மட்டுமல்ல. பீகார் மக்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.
முழுமையான அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நேர்மையுடன் ஒவ்வொரு பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உறுதியேற்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலும், தேசிய தலைவர் நிதின் நபின் வழிகாட்டுதலிலும், பீகாரை வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பாடுபடுவேன்’’ என கூறி உள்ளார். இதன் மூலம் பீகாரில் கடந்த 2005 முதல் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
* யார் இந்த சாம்ராட்?
பீகார் துணை முதல்வரான 57 வயதாகும் சாம்ராட் சவுத்ரி பீகாரில் பாஜவின் வலிமையான ஓபிசி முகமாக அறியப்படுகிறார். பீகார் அரசியல் தலைவர் சகுனி சவுத்ரியின் மகனான சாம்ராட் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளில் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றி பிறகு 2017ல் பாஜவில் இணைந்தார். 2023ல் பாஜ மாநில தலைவராக்கப்பட்டார்.
தாராபூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் 2024ல் என்டிஏ கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக்கப்பட்டார். 2025ல் சட்டப்பேரவை தேர்தலில் கட்சியின் பிரசாரத்தை முன்னின்று வழிநடத்தினார். அமித்ஷாவுக்கு நெருக்கமானவரான சாம்ராட், மாநில உள்துறை அமைச்சர் பொறுப்பை தன் வசம் வைத்திருந்தவர். அடுத்த மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜவுக்கு வலுவான ஓபிசி முகம் தேவைப்படுவதால், இப்போதே சாம்ராட்டை மாநில முதல்வராக்கி இருக்கிறது பாஜ மேலிடம்.
