×

33 % மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல்

* 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தால் சர்ச்சை

புதுடெல்லி: மக்களவை,மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை, மாநில சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 2023ல் ஒன்றிய அரசு சட்டம் இயற்றியது.

இந்நிலையில், வரும் 2029 பொது தேர்தலில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் நாளை முதல் 3 நாட்கள் நடத்த உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மக்களவையில் விவாதத்திற்கு வரும் மூன்று முக்கியமான மசோதாக்களில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மசோதாவுக்காக அரசியலமைப்பின் 81வது பிரிவை அரசு திருத்த உள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின் வரைவு மசோதா எம்பிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி மாநிலங்களில் இருந்து நேரடி தேர்தல் மூலம் தேர்வாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வாகும் எம்பிக்களின் எண்ணிக்கை 35 இடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதன்மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும்.

இந்த மாற்றங்கள் 2029 பொதுத் தேர்தல்களில் இருந்து அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மாறிவரும் மக்கள்தொகை அமைப்புகளைச் சிறப்பாகப் பிரதிபலிப்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதை எளிதாக்கும் நோக்கில் இந்த இட அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறிஉள்ளது.

ஆனால், கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு புதிய தொகுதி மறுவரையறை செய்வது இந்த முன்மொழிவின் மையமாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 2026க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இப்போது, 2011 கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருந்த உ.பி, பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை சாதகமாக இருக்கும். ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ்,திமுக,திரிணாமுல், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகளிருக்கான ஒதுக்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

* மோடி வேண்டுகோள்
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இதைச் செயல்படுத்துவதில் இனி எவ்விதத் தாமதமும் இருக்கக்கூடாது. இது இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும். 2029-ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தேசத்தின் உணர்வு” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதா இது. அனைத்துக் கட்சிகளும் முன்வந்து, இந்த முக்கியமான சட்டத்திற்கு ஆதரவளித்தன. இதைச் செயல்படுத்துவதில் இனி எவ்விதத் தாமதமும் இருக்கக்கூடாது. இது இப்போதே செயல்படுத்தப்பட வேண்டும். 2029-ம் ஆண்டிற்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தேசத்தின் உணர்வு” எனத் தெரிவித்துள்ளார்.

* காலத்தின் தேவை: அமித் ஷா
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காலத்தின் தேனை என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறினார். எக்ஸ் தளத்தில் அமித்ஷா பதிவிடுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காலத்தின் தேவையாகும். கொள்கை வகுப்பதில் பங்களித்து, தேசத்திற்கு வலுவூட்டுவது நமது பெண்கள் சக்திக்கு உரிய உரிமையாகும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்த மோடி அரசு உறுதியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* 3 மசோதாக்கள் என்னென்ன?
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் 3 மசோதாக்கள் விவரம்: கடந்த 8ம் தேதி ஒன்றிய அரசு 3 வரைவு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலாவது மசோதாவானது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும், பொதுவாக நாரி சக்தி வந்தன் அதினியம் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட்டம், 2023-ஐத் திருத்தும் 131வது அரசியல் சட்ட திருத்த மசோதாவாகும். இதில் அரசியல் சட்டத்தின் 81வது பிரிவை திருத்துவதன் மூலம் மக்களவையின் பலம் 543-லிருந்து 816 ஆகவும்,

மாநிலங்கள் முழுவதுமான மொத்த சட்டமன்ற இடங்கள் 4,123-லிருந்து 6,186 ஆகவும் உயர்த்தப்படும். 816 மக்களவை இடங்களில், 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பானது. இரண்டாவது மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டை யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தும். மூன்றாவது தொகுதி மறுவரையறை மசோதாவாகும்.

Tags : Lok Sabha ,Census ,Delhi ,
× RELATED நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நிரவ் மோடி முறையீடு