- இந்திய உணவு கழகம்
- பனசா மதுகாவுட்
- செருவுடலி
- மதுகுலா மண்டலம், நல்கோண்டா மாவட்டம், தெலுங்கானா மா
- அல்கபுரி
- ஹைதெராபாத்
திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மதுகுலா மண்டலத்திலுள்ள செருவுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பனசா மதுகவுட்(31). இவர் பிழைப்புக்காக ஐதராபாத் சென்று அல்காபுரி பகுதியில் வசித்து வருகிறார். பல இடங்களில் திருமணம் செய்து கொள்ள பெண் தேடியும் கிடைக்காததால் தன்னை தானே ஒன்றிய அரசு ஊழியர் என திருமண இணையதளங்களில் பதிவு செய்து கொண்டார்.
அதில் இந்திய உணவு கழகத்தின் செர்லபள்ளி பிரிவில் கிரேடு-3 தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிவதாகக் கூறி, அவர் ஒரு போலி சுயவிவரத்தை பதிவிட்டார். இதனை பார்த்த நல்கொண்டாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் குடும்பத்தினர் முன்வந்ததால், அவர்களை நம்ப வைக்க ஒரு போலி அடையாள அட்டையையும் உருவாக்கினார். அந்த இளம்பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதை அறிந்து கொண்டு முதலில் ரூ.2 கோடி வரதட்சணையாக கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
இறுதியாக பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ரூ.1.5 கோடி வரதட்சணை கொடுக்க பெண் வீட்டார் முன்வந்தனர். நிச்சயதார்த்தமும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என்ற பெயரில் சைதன்யபுரியில் உள்ள ஒரு அறைக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பனசா மதுகவுட், தவறாக நடந்து கொள்ள முயன்றது மட்டுமின்றி, இளம்பெண்ணை கடுமையாக தாக்கினாராம்.
அவரது விசித்திரமான நடத்தை மற்றும் துன்புறுத்தலால் பயந்துபோன அந்த இளம்பெண், உடனடியாகத் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சந்தேகமடைந்த பெண் வீட்டார் அவர் வேலை செய்வதாக கூறிய இந்திய உணவு கழகத்தின் அலுவலகத்தில் விசாரித்தனர். அப்போது பனசா மதுகவுட் என்ற பெயரில் அங்கு யாரும் வேலை செய்யாதது தெரியவந்தது.
அவர் காட்டிய அடையாள அட்டை போலியானது என்பதை அறிந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அவர்கள் உடனடியாக சைதன்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பனசா மதுகவுட்டை நேற்று முன்தினம் கைது செய்தனர். திருமண இணையதளங்களில் வரன் தேடுபவர்கள் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
