×

சபரிமலையில் இன்று விஷுக்கனி தரிசனம்: பக்தர்கள் குவிகின்றனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்திரை மாத பிறப்பு மற்றும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு சபரிமலையில் இன்று சிறப்பு பூஜைகளும், விஷுக்கனி தரிசனமும் நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் விஷுக்கனி தரிசனம் தொடங்கும். கோயிலில் ஐயப்ப விக்கிரகத்தின் முன் பழங்கள் காய்கறிகள், புத்தாடை, மலர்கள் நகைகள், பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை பக்தர்கள் விஷுக்கனியை தரிசிக்கலாம்.

இந்த சமயத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதியுடன் சித்திரை மாத, சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். விஷுக்கனி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Tags : Vishukkani Darshan ,Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Chithirai ,Chithirai Vishu festival.… ,
× RELATED நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து...