ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் பலியானார்கள். மேலும் 40 பேர் காயமடைந்தனர். சட்டீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அவசரகால மீட்பு குழுவினரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாய்லர் வெடித்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
