புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, 2019 முதல் லண்டன் சிறையில் உள்ளார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அவர் தொடர்ந்த மனுக்களை லண்டன் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரிட்டன் ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில் கையெழுத்திட்ட ஒரு நாடாகும். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு அடையாளம் மறைக்கும் சலுகையை வழங்கியுள்ளது.
இதன் மூலம், அவரது வழக்கு விசாரணைகள் பொதுமக்களின் பார்வைக்கு உட்படாமல் நடத்தப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழக்குக் கோப்புகள் ரகசியமானதாக இருக்கும் நேர்வுகளில், நீதிமன்றம் அந்த வழக்கு குறித்த எந்தத் தகவலையும் வழங்க முடியாது என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் பத்திரிகை அலுவலகம் கூறியுள்ளது. நீரவ் மோடியின் மனு மீதான விசாரணையை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இரண்டு வாரங்களில் நடத்த வாய்ப்புள்ளது.
