‘காலனி’ என்ற சொல் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வித் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டியை சேர்ந்த 385 பேர் உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வித் திட்டத்தின் கீழ் அதிகபட்ச உதவித் தொகை ரூ.36லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2003ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மிக குறைவாக 6 மாணவர்கள் மட்டுமே பயன் அடைந்தனர். ஆனால் 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை 385 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.162 கோடி உதவித் தொகை அளிக்கப்பட்டு அவர்கள் உலகமெங்கும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். ஆதிராவிட குடியிருப்புகளை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் ‘காலனி’ என்ற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் மாறிவிட்டதால் அந்த சொல்லை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்தும் பொது பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கும் இந்த அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* 12லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ரூ.1359 கோடியில் பள்ளி கட்டிட கட்டுமான பணிகள்
12 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை மற்றும் ரூ.1359 கோடியில் பள்ளி கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கி அவர்களது கல்விச் செலவில் ஏற்படும் பற்றாக்குறை தணிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 12லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1831 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணையும், எழுத்தையும் பழுதறக் கற்க உதவும் எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுவதற்காக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டன. மேலும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 4247 பள்ளி கட்டிடங்கள் கட்டுமானத்திற்காக ரூ.1359 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்ல பள்ளிகளுக்கு புத்துயிர் அளித்திட ரூ.678 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
