கோவை: கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏ.ஜே.கே. கல்லூரியில் நேற்று நடைபெற்ற கல்வி விருதுகள் வழங்கும் விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே அவர் பேசியதாவது: இந்தியா இன்று விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் ஏவுதல், உள்நாட்டு கண்டுபிடிப்புகள், மேம்பட்ட விண்வெளி பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா உலகளவில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது.
முன்பு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் மட்டுமே மாணவர்களின் இலக்காக இருந்தது. தற்போது உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது. கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி குறித்து எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை. எந்தத் துறையில் படித்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகள் உலக நாடுகளை வியக்க வைத்துள்ளன.
நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளோம். 2035க்குள் இந்தியாவிற்கெனத் தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும். அதற்கான பணிகள் 2028-லேயே தொடங்கும். 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய மாணவர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
