×

அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசையில் அத்துமீறல்களை கட்டுப்படுத்த பயோமெட்ரிக் பூட்டு அறிமுகம்: இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், வரிசையில் அனுமதிப்பதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க சோதனை முயற்சியாக பயோ மெட்ரிக் பூட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னுரிமை தரிசனம் எனும் பெயரில் அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் ஆதிக்கமும் பெருகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி, இடைத்தரகர்களும், தரிசன வரிசையின் பூட்டு சாவியை வைத்துக்கொண்டு, அத்துமீறி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை கடந்து, குறுக்கு வழியில் கதவுகளை திறந்து சிலர் அழைத்து செல்வதால் அடிக்கடி தகராறும், தள்ளுமுள்ளும் ஏற்படுகிறது.

எனவே, தரிசன வரிசை நுழைவு பகுதிகளில் உள்ள இரும்பு கதவுகளில் பயன்படுத்தும் பூட்டு சாவிகளுக்கு பதிலாக, பயோ மெட்ரிக் முறையிலான பூட்டுகளை பயன்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, வைகுந்த வாயில் நுழைவு கேட், கிளி கோபுரம் நுழைவு பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக பயோமெட்ரிக் பூட்டுகள் தற்போது போடப்பட்டுள்ளது.

மேலும், கோயில் இணை ஆணையரின் அனுமதி பெற்ற கோயில் ஊழியர்கள் மட்டுமே இந்த பூட்டுகளை திறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், இடைத்தரகர்கள் அனுமதியின்றி பக்தர்களை கோயிலுக்குள் அழைத்து வருவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...