×

உயர் ரக வெளிநாட்டு சரக்கோடு விமானத்தில் மிதக்கலாம்: ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சர்வதேச விமான பயணிகள் இனி மது மயக்கத்தில் விமானத்தில் பறக்கலாம். இதற்காக உயர் ரக வெளிநாட்டு சரக்கும் வழங்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் போன்றவைகளில் பயணிக்கும் சர்வதேச விமான பயணிகளுக்கு விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, விருப்பப்படும் பயணிகளுக்கு மிகக் குறைந்த அளவு மதுபானங்கள் குடிக்க கொடுப்பது வழக்கம்.

ஆனால் வெவ்வேறு நிறுவன விமானங்களில், வெவ்வேறு விதமாக, மதுபானங்கள் வழங்கப்படும். சில விமானங்களில், உயர் வகுப்பு விமான பயணிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வேறு சில விமானங்களில் கட்டணங்கள் வசூலித்து விட்டு, மதுபானங்கள் வழங்கப்படுகிறது. சில விமானங்களில் உயர்ரக மதுபானங்கள் வழங்காமல், சாதாரண ரக மதுபானங்கள் வழங்குவதாக பயணிகள் குறைப்பட்டு கொள்வதும் உள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்களுடைய விமானங்களில் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவருக்கும் உயர் ரக, வெளிநாட்டு மதுபானங்கள் வழங்கும் திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. அதற்காக பயணிகளிடம் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பது இல்லை என்றும் அவர்களுடைய டிக்கெட் கட்டணத்திலேயே, பேக்கேஜின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பயணிகளின் கேபின்களான முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரீமியம் எகனாமி, எகனாமி வகுப்பு, இவைகளுக்கு தகுந்தாற்போல், மதுபானங்களின் ரகங்கள் மாறுபடுகிறது. ஆனால் அனைத்து வகுப்புகளிலும் பயணிக்கும் பயணிகளில் விருப்பப்படும் பயணிகள் அனைவருக்கும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த மதுபான விருந்தில் மிகவும் உயர்ரக Scotland 21 YO single malt மற்றும் இத்தாலி நாட்டு தயாரிப்பு உயர் ரகம் மதுபானங்கள், சிவப்பு ஒயின்கள், பீர் ரகங்கள் உள்ளிட்டவர்கள் வழங்கப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மதுபான விருந்து அனைத்தும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும், உள்நாடுகளில் இயக்கப்படும் ஏர் இந்தியா பயணிகளுக்கு, மதுபானங்கள் விமானத்துக்குள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்பு, ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில், பயணிகள் பயணம் செய்வது குறைந்துவிட்ட காரணத்தால் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை செய்து தங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு பயணிகளை ஈர்ப்பதற்காக ஏர் இந்தியா விமான நிறுவனம் இதுபோன்ற கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிடுவதாக விமான பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Air India ,Chennai ,India ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...