×

பெரம்பலூர் அருகே சினிமா பாணியில் வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயன்ற கும்பல்: எஸ்ஐ,2 போலீசார் படுகாயம்

பெரம்பலூர்: மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (எ) வெள்ள காளி(30). சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. சரித்திர பதிவேடு குற்றவாளி. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளை காளியை கஞ்சா வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினர். இரவானதால் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று காலை 10 மணியளவில் சென்னை பெருநகர ஆயுதப்படை எஸ்ஐ ராமச்சந்திரன்(54) தலைமையில் காவலர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி தினேஷ் குமார்(37), மதுரை வாடிப்பட்டி மருதபாண்டி(30) ஆகியோர், ரவுடி வெள்ள காளியை புழல் சிறைக்கு வேனில் அழைத்து சென்றனர். பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வேனை நிறுத்தி ஒரு ஓட்டலில் மதியம் 2 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், 6 நாட்டு வெடிகுண்டுகளை ஓட்டலில் வீசி ரவுடி வெள்ள காளியை கொல்ல முயன்றனர். அதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், காவலர்கள் மருதபாண்டி, தினேஷ்குமார் ஆகியோர் காயமடைந்தனர். காயம் ஏற்பட்ட போதும் எஸ்ஐ ராமச்சந்திரன், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய கும்பல் மீது 15 முறை சுட்டார்.

ஆனால், அவர்கள் தப்பிவிட்டனர். சினிமா பாணியில் நடந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு சம்பவம், ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்.

போலீஸ் வேன் டிரைவரான காவலர் தினேஷ் குமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் நிற்காததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி அனிதா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலும் ஆய்வு செய்தனர்.

* 15 ஆண்டில் 8 கொலை வழக்கு
ரவுடி காளிமுத்து (எ) வெள்ள காளி மீது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 15ஆண்டுகளில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. பல்வேறு போலீஸ் நிலைய ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. வெள்ள காளியை போலீசார் என்கவுன்டர் செய்ய இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதுடன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது.

* தப்பிய கும்பலை பிடிக்க 5 தனிப்படை: ஐஜி தகவல்
திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ ரவுடி கும்பல் மீது சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் துப்பாக்கியால் 15 முறை சுட்டுள்ளார். இதில் எதிரிகளுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டிருக்கலாம். இருந்தும் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’’ என தெரிவித்தார்.

* கடலூரில் ஒரு கார், அரிவாள்கள் பறிமுதல்
சப் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி சூட்டுக்கு பயந்து 2 காரில் தப்பி சென்ற மர்ம கும்பல், ஒரு காரை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் விட்டு சென்றுள்ளனர். அந்த காரை கடலூர் போலீசார் பறிமுதல் செய்ததோடு அதில் இருந்த அரிவாள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

Tags : Perambalur ,Kalimuthu (A) Vella Kali ,Muthuramalinga Thevar Street, Kamarajapuram, Madurai ,Kamudi, Ramanathapuram district ,Vella Kali ,Chennai ,Puzhal ,Pudukottai… ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...