கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன நாகை மீனவர் கோவளம் கடற்கரையில் சடலமாக மீட்பு

திருப்போரூர்: நாகப்பட்டினத்தில் தந்தையுடன் கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போன நாகை மீனவர், கோவளம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கசாமி. மீனவரான இவர், தனது மகன் ரகுநாதன் (28) உட்பட 10 மீனவர்களுடன் விசைப்படகில் கடந்த 14ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். இவர்கள், நாகப்பட்டினம் கடலில் இருந்து சென்னை அருகே கடற்கரை வரை மீன் பிடித்துவிட்டு, கடந்த 16ம் தேதி நாகப்பட்டினம் கரைக்கு திரும்பினர்.

அப்போது, தங்கசாமியின் மகன் ரகுநாதன் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தங்கசாமி, மீன்பிடிக்க சென்றபோது தனது மகன் கடலில் விழுந்திருக்கலாம் என்று நாகப்பட்டினம் நகர போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் வாலிபரின் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், கடலில் மீன் பிடிக்கச்சென்று காணாமல்போன நாகப்பட்டினம் மீனவர் ரகுநாதன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, கேளம்பாக்கம் போலீசார் இது குறித்து நாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடலில் கரை ஒதுங்கிய ரகுநாதனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,ரகுநாதனின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன நாகை மீனவர் கோவளம் கடற்கரையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: