முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறியை தூண்டும் பேச்சு பவன் கல்யாண், அண்ணாமலை, நயினாரை கைது செய்ய வேண்டும்: மதுரை கமிஷனரிடம் வழக்கறிஞர் புகார்

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டின்போது மதவெறியை தூண்டும் வகையில் அச்சுறுத்தும்படி பேசிய, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை தே.பா சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென புகார் அளிக்கப்பட்டது. மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் வாஞ்சிநாதன் தலைமையில் ஏராளமானோர், நேற்று மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையில் கடந்த 22ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர் மாநாடு நடந்தது.

முன்னதாக, மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாதெனவும், இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது.  மாநாட்டின்போது, சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழநி மலை என முருகனின் தலங்களில் பிரச்னை செய்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறுகின்றனர். குன்றம் குமரனுக்கே என்பதால் மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

வரும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாக்கு வங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பது போன்று தீவிரமாக மதவெறியைத் தூண்டும், அதிர்ச்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டில் தலைவர்கள் பேச்சு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ மக்களிடையே மதவெறியைத் தூண்டி வெறுப்பையும், வன்முறையையும் விதைப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் அமைதி, வளர்ச்சியை சீர்குலைத்து ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. எனவே, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், காடேஸ்வர சுப்ரமணியம், முருகன் மாநாட்டு ஏற்பட்டாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறியை தூண்டும் பேச்சு பவன் கல்யாண், அண்ணாமலை, நயினாரை கைது செய்ய வேண்டும்: மதுரை கமிஷனரிடம் வழக்கறிஞர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: