மலைச்சாலையில் மண் சரிவை தடுப்பதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்பாடு

கொடைக்கானல்: கொடைக்கானல்-அடுக்கம் மலைச்சாலையில் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க ‘சாயல் நீலிங்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வந்து செல்வதற்கு பழநி, வத்தலக்குண்டு மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக 3 மலைச்சாலைகள் உள்ளன. இவற்றில் கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் சாலையை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை தவிர்த்து பிற இலகு ரக வாகனங்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சாலையில் மண்சரிவு ஏற்படும் மூன்று இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, நவீன தொழில்நுட்பமான ‘சாயல் நீலிங்’ முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சரிவான பகுதிகளில் உள்ள சிறிய பாறைகள், மரத்துண்டுகள் உள்ளிட்டவற்றை அப்புறத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 4 சக்கர வாகனங்கள் மற்றும் டூவீலர் போக்குவரத்து தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘ஒரு சில தினங்களில் மலைச்சாலையில் சாயல் நீலிங் பணி முடிவடைந்துவிடும்’’ என்றனர்.

The post மலைச்சாலையில் மண் சரிவை தடுப்பதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: