அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3வது நாளாக தொடரும் விசாரணை: சோதனையில் கைப்பற்றிய 60 ஆவணங்கள் குறித்து கேள்வி

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றிய 60 சொத்து ஆவணங்களை வைத்து 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 18 மணி நேரம் நீடித்த சோதனை முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நள்ளிரவில் கைது செய்தனர்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து ஒரு கட்டத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனே செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, இதய ரத்த குழாயில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த மனுவை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் காவலில் எடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக இன்று காலை 8 மணி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது செந்தில் பாலாஜி சொத்து ஆவணங்கள் குறித்தும், அது எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாகவும், அப்போது பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கும் அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் இடையே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி டாக்டர்கள் மூலம் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3வது நாளாக தொடரும் விசாரணை: சோதனையில் கைப்பற்றிய 60 ஆவணங்கள் குறித்து கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: