9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் மனநலம், வாழ்வியல் திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வேலூர்: 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு மனநலம், வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறை சட்டமன்ற பேரவையில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.

அதனை ஈடுசெய்யும் வகையிலும், அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்சார்ந்த பயிற்சி 2022 – 2023ம் கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்ட மாணவர் கையேட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள 30 செயல்பாடுகளை தற்போது மின்னுருவாக்கம் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் மூலமாக மாணவர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 செயல்பாடுகளுள் இக்கல்வியாண்டில் (2023-24) 15 செயல்பாடுகளும், அடுத்த கல்வியாண்டில் (2024-25) 15 செயல்பாடுகளும் வழங்கிடத்தக்க வகையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து மின்னுருக் கட்டகங்களாக உருவாக்கியுள்ளது.

முதற்கட்டமாக இக்கல்வியாண்டு முதல் இந்த அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக மின்னுருவாக்கம் செய்யப்பட்ட 15 செயல்பாடுகளை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு குறுவள மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வி துறைப் பயிற்சி அட்டவணையின் பரிந்துரையின்படி ஜூலை முதல் ஒவ்வொரு மாதத்தில் நான்காவது வாரத்தில் இந்த பொருண்மை சார்ந்து இரண்டு செயல்பாடுகளை மாணவர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். இது சார்ந்து 11ம் 12ம் வகுப்புகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இப்பொருண்மை சார்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்திடவும், செயல்தாள்களை மாணவர்கள் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்திலுள்ள கணினி வாயிலாக செய்து பார்க்க துணை புரிந்திட வேண்டும்.

இந்த பயிற்சி பற்றிய முழு தகவல்களும் ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கையேடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையத்தளத்தில் https://tnschools.gov.in/scert/\”lang=ta பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற மாணவர்கள் கட்டகத்தில் உள்ள செயல்தாள்களை செய்து கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்து அதன் தரவுகளை கல்வித்தகவல் மேலாண்மை தொகுப்பமைப்பு வாயிலாக சேகரித்தல் வேண்டும். இவ்வாறாக இப்பணிகளை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மாணவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

The post 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் மனநலம், வாழ்வியல் திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: