மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை, பனி மூட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சாரல் மழை மற்றும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கும் வட கிழக்கு பருவமழை நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக கடந்த மாதம் இறுதியில் துவங்கியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் போது மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.

குறிப்பாக மஞ்சூர், ஊட்டி, குன்னுார் சாலை, மஞ்சூர் அப்பர்பவானி சாலை, மஞ்சூர் கிண்ணக்கொரை சாலை, எடக்காடு எமரால்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகும். இந்நிலையில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் குறைந்த நாட்கள் மட்டுமே நீடித்தது.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் சில தினங்கள் காலை நேரங்களில் வெயிலும் அதை தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் பனியும் நிலவி வந்தது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மழையின் தாக்கம் இருந்த நிலையில் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்தது. அதே நேரத்தில் இரவு பகலாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

சாரல் மழையுடன் கடும் பனி மூட்டமும் நிலவுவதால் பகல் நேரங்களிலும் கடும் குளிர் வாட்டுகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு விட்டு, விட்டு பெய்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்றுக்காலை முதலே மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. எதிரே உள்ள பொருட்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனி மூட்டமும் நீடித்தது.

இதனால் மஞ்சூர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. மேலும் பனி மூட்டம் காரணமாக மலைப்பாதையில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் முகப்பு விளக்குகளை ஒளிர செய்தபடி குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. குறிப்பாக மஞ்சூர் கிண்ணக்கொரை, மற்றும் கெத்தை சாலைகளில் பல மணி நேரம் நீடித்த பனி மூட்டத்தால் நேற்று இவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டுனர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

The post மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை, பனி மூட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: