மழைநீர் மீட்பு பணியில் மந்தம் பூந்தமல்லி பிடிஓ பணியிட மாற்றம்

பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியில் மந்தகதியில் செயல்பட்ட பிடிஓ பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மிக்ஜாம் புயலால் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய‌ ஊராட்சிகளில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், அதிகாரிகள் வெள்ளநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் மழைநீர் வடியவில்லை. இதனால், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய‌ ஊராட்சிகளில் முகாமிட்டு மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார். இந்நிலையில் நேற்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி, ஒன்றிய சேர்மன் பூவை எம்.ஜெயகுமார் ஆகியோர் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை‌ ஆய்வு செய்தனர். அப்போது, மழைநீரை அகற்றுவதில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் சரிவர நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினை திருத்தணிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

The post மழைநீர் மீட்பு பணியில் மந்தம் பூந்தமல்லி பிடிஓ பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: