மக்களவையில் நிறைவேறிய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே 33 சதவீத இட ஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவித்தார். இதையடுத்து மசோதா மீது அனைத்து கட்சி எம்பிக்களும் பேசினர். நாடாளுமன்ற 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து ஒன்றிய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. அதில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. 27 ஆண்டுகள் பழமையான இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு சட்டமாக்குவதை எதிர்க்கட்சிகள் உட்பட பலர் வரவேற்றனர். நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி, எம்பிக்கள் பிரியா விடை கொடுத்துவிட்டு நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு சென்று அவை நடவடிக்கைகளை தொடங்கினர்.

அப்போது ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சி எம்பிக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் நேற்று மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக மசோதா தொடர்பாக திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பினார். அதில், உடனே செயல்படுத்தும் விதமாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் வரை காத்திருக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். இந்த மசோதா மீது உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது. இது அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா போல் இல்லை.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜீவ் காந்தியின் கனவாகும். காங்கிரஸ் இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கிறது. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்றார். இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 பெண் எம்பிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 454 எம்பிக்கள் ஆதரவாகவும், மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த 2 எம்பிக்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர். நடப்பு சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெற்றது. மக்களவையை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இங்கும் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் சட்ட விதிகள் 330, 332 மற்றும் 334 ல் கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்படும். இதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்த இட ஒதுக்கீடு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு பெண்களுக்கும் பொருந்தும். இது வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாகும். மகளிருக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்தும். இதனை அமல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான வரையறை அவசியமானதாகும்,’என்றார். அதனைத்தொடர்ந்து பாஜ எம்பியும் அந்த கட்சியின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த இட ஒதுக்கீடு மசோதா உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அதிகளவு ஓபிசி பிரிவை சேர்ந்த எம்பிக்கள் எங்கள் கட்சியில் உள்ளனர்,’என்றார். தொடர்ந்து மசோதா மீது காரசார விவாதம் நடைபெற்றது. இங்கும் அனைத்து கட்சிகளின் பெண் எம்பிக்கள் மசோதா மீது காரசாரமாக பேசினர். விவாதத்துக்கு பின்னர் மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா உடனடியாக சட்டமாக மாறும்.

The post மக்களவையில் நிறைவேறிய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் காரசார விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: