திருமலை : கடப்பாவில் அதிகாலை ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், கடப்பா நகரின் ஆசாத் நகர் காலனியை சேர்ந்த 10 பேர் புரோதட்டூர் வழியாக மல்லலே கிராமத்திற்கு ஆட்டோவில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோ எர்ரகுண்ட்லா பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்புறமாக அதிவேகமாக வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த முஹம்மது(25), ஷாகிர்(10), ஹசீனா(25), ஆமினா(20) ஆகிய 4 ேபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் உடனே இதுகுறித்து ஏர்ரகுண்ட்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புரோதட்டூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயடைந்தவர்களும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர்கள் விவரங்கள் மற்றும் அவர்கள் எதற்காக ஆட்டோவில் பயணம் செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post கடப்பாவில் அதிகாலை சோகம் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.