* வேட்புமனு தாக்கல் முடிந்ததால் பரபரப்பு, தொகுதி பங்கீடு முடியாததால் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு வரும் நவ. 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ – அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஓரணியாகவும், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிரணியாகவும் களத்தில் உள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
முக்கிய வேட்பாளர்களான முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜீத் பவார், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சைகள் உட்பட 7,995 வேட்பாளர்கள் 10,905 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் 15 தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது கேள்வியாக உள்ளது. ஆளும் கூட்டணியில் இன்னும் 4 இடங்களுக்கான வேட்பாளர்களை
அறிவிக்கவில்லை.
அதேபோல் எதிர்க்கட்சி தரப்பில் இன்னும் 11 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் நவம்பர் 4ம் கடைசி தேதியாகும். அதன்பின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். இருந்தாலும் ஆளுங்கட்சி – எதிர்கட்சிகள் சார்பில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்றே தெரியாத நிலையே நீடிக்கிறது.
எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் ஏதாவது ஒரு சுயேட்சை வேட்பாளரை இந்த கட்சிகள் ஆதரிக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது. சம்பந்தப்பட்ட கட்சியின் சின்னத்தில் எந்த வேட்பாளரும் 15 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்யாதது மகாராஷ்டிரா தேர்தல் களம் விநோதமாக இருக்கிறது.
* சொத்துகள் 575% அதிகரிப்பு, காட்கோபர் பா.ஜ எம்எல்ஏ நம்பர் 1 பணக்கார வேட்பாளர் 2019ல் ரூ.550.62 கோடி, இப்போ ரூ.3383.06 கோடி
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்து விட்டது. சுமார் 8000 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்ற பெயரை காட்கோபர் பா.ஜ வேட்பாளரும், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுமான பராக் ஷா பெற்றுள்ளார். 2019ல் அவரது சொத்து மதிப்பு ரூ.550.62 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3383.06 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பராக் ஷாவின் சொத்து மதிப்பு 575 சதவீதம் அதிகரித்துள்ளது.
* சீட் கிடைக்காமல் மாயமான எம்எல்ஏ வீடு திரும்பினார்
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பால்கர் தொகுதி எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் வாங்காவுக்கு, இந்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. அதனால் விரக்தியடைந்த ஸ்ரீனிவாஸ் வாங்கா, உத்தவ் அணியிலேயே இருந்திருக்கலாம் என புலம்பி, வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது இரண்டு செல்போன்களையும் அணைத்துவிட்டு வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை கட்சியினரும், அவரது உறவினர்களும் பல இடங்களில் தேடியும் ஸ்ரீனிவாஸ் வாங்கா கிடைக்கவில்லை. இந்நிலையில், மாயமாகி சுமார் 36 மணி நேரத்துக்குப் பிறகு ஸ்ரீனிவாஸ் வாங்கா நேற்று வீடு திரும்பியதாக அவரது மனைவி தெரிவித்தார்.
The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தாத ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி appeared first on Dinakaran.