இந்தியா- சீன எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 2017ம் ஆண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது முதல் இரு தரப்பினர் இடையே மோதல் துவங்கியது. அதன்பின் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பம் இந்திய – சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்திய – சீன தலைவர்கள் சந்திப்பே நான்காண்டுகளாக நடக்கவில்லை.
இப்பிரச்னையை தீர்க்க ராணுவ உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்தன. அதன் பயனாக, படைகளை வாபஸ் பெறுவது என்றும், இரு நாட்டு ராணுவத்தினரும் 2020க்கு முன் இருந்த எல்லை ரோந்து நிலவரப்படி ரோந்து செல்வது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, ரஷ்யாவில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா – சீனா ராணுவத்தினர் கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சோக் பகுதியில் இருந்து வாபஸ் பெறும் பணியை நிறைவு செய்தனர். இங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதை சரிபார்க்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. இப்பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினரும் ரோந்து செல்லும் பணியை இம்மாதம் இறுதியில் மேற்கொள்கின்றனர்.
The post இந்திய சீன ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து! appeared first on Dinakaran.