டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப் போலீஸ் நிலையத்தை ஸ்டூடியோவாக மாற்றிய பிஷ்னோய்: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

சண்டிகர்: டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப் போலீஸ் நிலையத்தை லாரன்ஸ் பிஷ்னோய், ஸ்டூடியோவாக மாற்றியது தெரிய வந்ததால் பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாபி பாடகர் ஷுப்தீப் சிங் சித்துவின் கொலையில் சந்தேக நபரான பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரது நேர்காணலை தனியார் செய்தி சேனல் 2023 மார்ச் மாதம் ஒளிபரப்பியது.

அப்போது கொலை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு பிஷ்னோய் விளக்கம் அளித்தார். இந்த நேர்காணல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரிக்க பஞ்சாப் போலீஸ் தரப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை மையம் அமைக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

நீதிபதிகள் அனுபிந்தர் சிங் கிரேவால் , லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிஷ்னோய் அடைக்கப்பட்டு இருந்த காவல் நிலையத்தை அவர் டிவி சேனல் ஸ்டூடியோவாக மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் சிறப்பு டிஜிபி(மனித உரிமைகள் ஆணையம்) பிரபோத் குமார் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளை கடுமையாக சாடியதுடன், பிஷ்னோய் பேட்டி அளிக்க காவல் நிலையத்தை எப்படி ஸ்டுடியோவாக பயன்படுத்த போலீசார் அனுமதி அளிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் காவல்துறையினருக்கும், லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் இடையேயான தொடர்பு மற்றும் சதி குறித்து மேலும் விசாரணை நடத்த புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டனர்.

The post டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப் போலீஸ் நிலையத்தை ஸ்டூடியோவாக மாற்றிய பிஷ்னோய்: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: