ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையறையிட்டு சொல்ல முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது எதிர்த்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த, பிரிவு 370 சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவு ஏன் நீக்கப்பட்டது? இதற்கான நோக்கம் என்ன? உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஒன்றிய அரசிடம் தலைமை நீதிபதி கேட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கான பதிலை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதில், பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் 2018 – 2023 வரை தீவிரவாத தாக்குதல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளன. கற்களை கொண்டு வீசுவது, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் 97 சதவீதம் குறைந்துள்ளது. ராணுவ வீரர்களின் உயிரிழப்பு 65 சதவீதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகளிடம் சென்று சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து அவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஷ்மீர் ஒன்றிய ஆட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது தற்காலிக ஏற்பாடுதான். மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன் அதற்காக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் எப்போதும் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தகவல் தெரிவித்தார். தேர்தல் வாக்காளர் பட்டியலை தயாரிக்கக்கூடிய பணிகள் என்பது கிட்டத்தட்ட நிறைவடையக்கூடிய நிலையில் இருக்கிறது.

விரைவில் பணிகள் முடிவடைந்துவிடும். எனவே தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதை காலவரையறையிட்டு சொல்ல முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

The post ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: