உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

சென்னை: ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகியுள்ள சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உத்திரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா மடத்தில் நிகழ்வு நடைபெற்ற இடம் மிகவும் சிறியதாக இருந்ததாகவும், அதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக இத்தகைய உயிரிழப்பு நடந்துள்ளது. இத்தகைய சிறிய இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்பதற்கு காவல்துறை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. இந்த சோகமான உயிரிழப்புக்கு உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கு தான் காரணமாகும். பொது வெளி மைதானத்தில் நடத்தப்பட வேண்டிய நிகழ்வை அரங்கத்திற்குள் நடத்த அனுமதித்ததால் அப்பாவி மக்கள் 116 பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

இத்தகைய சொற்பொழிவு நடக்க அனுமதி அளித்த காவல்துறை மீதும் இதை நடத்தியவர்கள் மீதும் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். உத்திரப் பிரதேசத்தில் பலியான 116 பேரின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: