சிறை பணியாளர் பிள்ளைகளை பராமரிக்க குழந்தை காப்பகம்: வேலூரில் தொடக்கம்

வேலூர்: தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் சிறை பணியாளர்களின் பிள்ளைகளை பராமரிக்க குழந்தை காப்பகம் அமைக்கப்பட உள்ளது. வேலூரில் குழந்தை காப்பகத்தை நேற்று டிஐஜி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறைத்துறை ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி, சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கைதிகளுக்கு தொழில் பயிற்சிகள், யோகா பயிற்சி வகுப்புகள், பல்வேறு விதமான மனவள கலை பயிற்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, கைதிகளின் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற புத்தகம் சேகரிக்கும் பணிகள் நடந்தது.

மேலும் கைதிகளின் மனதை ஆற்றுப்படுத்தவும், கைதிகளை அமைதிப்படுத்தி நல்வழிப்படுத்தவும் உலக அமைதி பேச்சாளர் மூலமாக அனைத்து மத்தியச் சிறைகளிலும் அமைதி கல்வித் திட்டம் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில், சிறைகளில் பணியாற்றும் காவலர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் வகையில், குழந்தை காப்பகம் மற்றும் டியூசன் சென்டர் அமைக்க ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, வேலூர் பெண்கள் காவலர் குடியிருப்பில் குழந்தை காப்பகம் மற்றும் டியூசன் சென்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தலைமை தாங்கி, காப்பகத்தை திறந்து வைத்தார். அப்போது, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் மற்றும் சிறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த குழந்தை காப்பகத்தில் குழந்தைகளை கவரும் வகையில், கார்ட்டூன் வரைபடங்கள், ஏபிசிடி, வரிசை எண்கள், கணிதம் குறித்த படங்கள், டிவி, புத்தகங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறகையில், சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்காக ‘க்ரீச்’ எனப்படும் குழந்தைகள் காப்பகம் மற்றும் டியூசன் சென்டர் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, வேலூர் பெண்கள் சிறை பணியாளர்கள் குடியிருப்பில் குழந்தைகள் காப்பகம் நேற்று துவங்கப்பட்டது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் சிறையில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது. 100 புத்தகங்களை கொண்டு ஒரு சிறிய நூலகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற மத்திய சிறைகளில் காவலர்கள் குடியிருப்பில் குழந்தைகள் காப்பகம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

The post சிறை பணியாளர் பிள்ளைகளை பராமரிக்க குழந்தை காப்பகம்: வேலூரில் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: