இஸ்ரேலின் புதிய அவதாரம்; பதிவிறக்கம் செய்யவோ, அழுத்தவோ வேண்டாம்; ஆன்லைன் விளம்பரம் மூலம் போனில் ஊடுருவும் ஸ்பைவேர்

வாஷிங்டன்: எதையும் பதிவிறக்கம் செய்யாமல், எந்த இணைப்பையும் அழுத்தாமல், ஆன்லைன் விளம்பரம் மூலமாக மட்டுமே உங்கள் கணினி, செல்போனை உளவு பார்க்கும் ஸ்பைவேர் மென்பொருளை இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது. உளவு மென்பொருள்களுக்கு பெயர் போன நாடு இஸ்ரேல். இந்நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சிகள் இந்த உளவு மென்பொருள் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்களை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த உளவு மென்பொருள், அதிக பாதுகாப்பு நிறைந்த ஆப்பிள் செல்போனிலும் ஊடுருவும் திறன் கொண்டது.

இந்நிலையில், அடுத்த வெர்ஷனாக இன்சாநெட் எனப்படும் இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனம் ஷெர்லாக் எனும் புதிய உளவு மென்பொருளை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக இதுபோன்ற தீங்கிழைக்கும் ஸ்பைவேர்கள் ஏதாவது லிங்கை அழுத்தினாலோ அல்லது ஏதாவது ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்தாலோ அதன் மூலம் போனில் ஊடுருவும். ஆனால் ஷெர்லாக், ஆன்லைன் விளம்பரம் மூலமாக நமது கணினி அல்லது செல்போனில் ஊடுரும் திறன் கொண்டது.

இப்போது நீங்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்க ஆன்லைனில் தேடினால் அதன் பிறகு எந்த வெப்சைட்டை திறந்தாலும், நீங்கள் பொருள் தொடர்பான விளம்பரங்கள் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இதற்காக அதிநவீன விளம்பரம் நெட்வொர்குகள் உள்ளன. இந்த ஆன்லைன் விளம்பரம் மூலமாகத்தான் ஷெர்லாக் உங்கள் போனில் ஊடுருவும். இந்த ஸ்பைவேரை புகுந்து விட்டால், அது உடனடியாக தகவல்களை சேகரித்து, ஸ்பைவேரை அனுப்பியவருக்கு தகவல்களை கடத்திவிடும். இதன் மூலம் செல்போன் வைத்திருப்பவரின் முழு நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும்.

இந்த ஸ்பைவேரை விற்பனை செய்ய இஸ்ரேலிய அரசு அனுமதி தந்துள்ளதன் மூலம், இணைய உலகில் மற்றொரு அச்சுறுத்தலான ஸ்பைவேராக மாறி உள்ளது.

* 2011 முதல் 2023 வரை, 74 அரசாங்கங்கள் ஸ்பைவேர் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
* ஸ்பைவேரை கண்காணிப்பதற்கும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கும், குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அரசாங்கங்கள் பயன்படுத்தக்கூடும்.
* முக்கிய பதவியில் இருப்பவர்களை கண்காணிக்கவும் சில நிறுவனங்கள் ஸ்பைவேரை பயன்படுத்தும்.
* ஹேக்கர்கள், இணைய வழி மோசடி பேர்வழிகள் பணம் திருடவும் ஸ்பைவேர் பயன்படுத்துவதுண்டு.
* இன்சாநெட் நிறுவனத்தின் தகவல்படி, ஷெர்லாக் ஸ்பைவேரின் விலை சுமார் ₹50 கோடி.

The post இஸ்ரேலின் புதிய அவதாரம்; பதிவிறக்கம் செய்யவோ, அழுத்தவோ வேண்டாம்; ஆன்லைன் விளம்பரம் மூலம் போனில் ஊடுருவும் ஸ்பைவேர் appeared first on Dinakaran.

Related Stories: