ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்; முதல்வர் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு

* ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்
* தொழில் வளர்ச்சி மேலும் கூடும்

ஓசூர்: ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை ஓசூர் தொழில் துறையினர், தொழில் வர்த்தக சபையினர் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத் தலைவர் மூர்த்தி கூறுகையில், ‘இது எங்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். பல்வேறு காரணங்களால் இந்த கோரிக்கை தடைபட்டு வந்தது. இதன் மூலமாக தொழில் துறை மட்டுமின்றி மலர்கள், கிரானைட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களும் விரிவடையும். தொழில் துறை மற்றும் ஹோஸ்டியா சங்கம் சார்பில் வரவேற்பதோடு, முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,’ என்றார். தொழில் வர்த்தக சபை தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, ஓசூர் தொழில் துறையினருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், ஓசூரை நோக்கி வரும் வாய்ப்பு அதிகரிக்கும். ஓசூரில் ஏற்கனவே உள்ள இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர கனகர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஓசூரில் இருந்து ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அதிகரிக்கும். ஓசூரின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். காய்கறி மற்றும் கொய் மலர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்,’ என்றார். டான்ஸ்டியா செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் கூறுகையில், ‘உலக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் நாள். இந்த நாளில் விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த நன்றி. ஓசூர் தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதன் மூலம் ஓசூரில் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஐ போன் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்.

மேலும் ஓசூரில் விரைவான தொழில் வளர்ச்சிக்கு உதவும்,’ என்றார். ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி தலைவர் குமார், முன்னாள் எம்எல்ஏ மனோகரன் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

The post ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்; முதல்வர் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: