இந்திய கால்பந்து அணி வீரர்கள் தேர்வில் ஜோதிடர் உதவி!

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியை ஜோதிடர் ஆலோசனைப்படி தேர்வு செய்ததாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் 2019ல் பொறுப்பேற்ற பிறகு, இந்திய கால்பந்து அணி கவனிக்கதக்க அணியாக மாறி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு தேசிய கால்பந்து அணியை ஜோதிடரின் ஆலோசனைப்படி தேர்வு செய்ததாக ஊடகம் ஒன்றில் நேற்று தகவல் வெளியானது. அணியை தேர்வு செய்வதற்கு முன்பு, கொல்கத்தாவில் வீரர்களுக்கான பயிற்சி முகாமை ஸ்டிமாக் நடத்தினார்.

முகாம் முடிவில் வீரர்களின் திறன் உள்ளிட்ட விவரங்கள் குறித்த பட்டியலை ஜோதிடர் ஒருவருக்கு ஸ்டிமாக் அனுப்பி உள்ளார். அதை பரிசீலித்த ஜோதிடர், முன்னுரிமை தர வேண்டிய வீரர்களின் பட்டியலை வரிசைப்படுத்தி அனுப்பி உள்ளார். இந்த ஜோதிடரை ஏற்பாடு செய்தது, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலர் குஷால் தாஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஜோதிடரின் பெயர் பூபேஷ் சர்மா என்றும், அவர் பாலிவுட், டெல்லி பிரமுகர்களின் முக்கிய ஜோதிடர் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி தேர்வு பெறுமா என்ற கவலையில்தான், குஷால் தாஸ் ஜோதிடரின் உதவியை நாடியுள்ளார். அந்த ஜோதிடர் வீரர்களின் பெயர் ராசி பலன்களை ஆராய்ந்து, இந்த வீரரை இன்று (குறிப்பிட்ட தேதியில்…) தேர்வு செய்வது ‘ நல்லது’, ‘நன்றாக செயல்படுவார்’, ‘அதீத நம்பிக்கையை தவிர்க்க வேண்டும்’, ‘சராசரிக்கும் குறைவான நாள்’ ‘வீரருக்கு நல்ல நாள்…. ஆனால் ஆக்ரோஷமாக இருக்கும்’, ‘இவரை இன்று தவிர்க்கலாம்’ என்று ஆலோசனைப் பட்டியலை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஜோதிடர், பயிற்சியாளர் இடையே 100 முறை தகவல் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இதை ஒப்புக்கொண்டுள்ள குஷால் தாஸ், ‘ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி பெறுமா என்று அப்போது கவலைப்பட்டேன். நானும் பயிற்சியாளுரும் நேர்மையை கைவிடவில்லை. நமது அணி தகுதிபெற வேண்டும் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. அதனால் பிரபல ஜோதிடரின் உதவியை நாடினேன். வீரர்கள் குறித்துதான் கேட்டோமே தவிர, வீரர்கள் தேர்வுக்காக கேட்கவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post இந்திய கால்பந்து அணி வீரர்கள் தேர்வில் ஜோதிடர் உதவி! appeared first on Dinakaran.

Related Stories: