இந்தியாவின் பெயரை நீங்கள் மாற்றினால் மக்கள் விரைவில் உங்களை மாற்றுவார்கள்: தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு

பெரம்பூர்: இந்தியாவின் பெயரை நீங்கள் மாற்றினால், மக்கள் விரைவில் உங்களை மாற்றுவார்கள் என, தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி சார்பில் புளியந்தோப்பில், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜ் முகமது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘திமுக பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டின் பக்கம் உலகளவில் விளையாட்டுத்துறை மீதான பார்வை திரும்பியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலகதரத்திற்கு இணையாக தமிழ்நாடு விளையாட்டுத்துறையை தரம் உயர்த்தியுள்ளார்,’’ என்றார்.

தயாநிதி மாறன் எம்.பி பேசுகையில், ‘‘மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இன்னும் 6 மாத காலத்தில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது. 9 ஆண்டு கால பாசிச பாஜ ஆட்சியில் வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது. மோடி அரசை வீழ்த்த எதிர்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணி அமைத்து ஆட்சி மாற்றத்திற்கான கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.மோடி வந்தால் இந்தியாவை வேறு மாதிரி மாற்றுவார்கள் என கூறினார்கள். ஆனால் இந்தியாவின் பெயரை வடிவேலு காமெடி போல் பாரத் என மாற்றுவதற்குதான் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மோடி இந்தியாவின் பெயரை மாற்றினாலும், மக்கள் பாஜவின் ஆட்சியை மாற்ற தயாராகி வருகின்றனர்,’’ என கூறினார். நிகழ்ச்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ, தொகுதி செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமி கண்ணு, வட்ட செயலாளர் சுரேஷ்குமார் என்கின்ற கொள்ளு சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post இந்தியாவின் பெயரை நீங்கள் மாற்றினால் மக்கள் விரைவில் உங்களை மாற்றுவார்கள்: தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: