கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு கருத்து ராமதாஸ், அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் அனுப்பியுள்ளனர். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஜூன் 19 மற்றும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் இடமாற்றம் ெசய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பீடு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், சாராயம் விற்பனை செய்ய துணை புரிந்ததாகவும், அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுவதாகவும், கள்ளக்குறிச்சியில் 30 ஆயிரம் பேர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை. அவர்களை காப்பாற்ற முயற்சிப்பது குற்றம் என்று தெரியாதா?. விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியாக நேரில் ஆஜராகி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அவர்கள் அளிக்கலாம். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனவே, இருவரும் 24 மணி நேரத்திற்குள் முன்னணி ஆங்கிலம் மற்றும் தமிழ்நாளேட்டின் பதிப்பின் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். பொய்யான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு கருத்து ராமதாஸ், அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: