கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலியை கண்டித்து எடப்பாடி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: சாலையை மறித்து பந்தல்: போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 59 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி நகரில் சேலம் மெயின்ரோட்டில் தனியார் திருமண மண்டபம் எதிரே மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார். இதையொட்டி சாலையின் நடுவே பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலை 8 மணி முதலே அவ்வழியாக சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து புறவழிச்சாலை வழியாக திருப்பி விட்டனர். இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து ஒவ்வொருவராக புறப்பட்டு சென்ற வண்ணம் இருந்தனர். எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இந்த விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது குறித்து அதிமுக சார்பில் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். போராட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரபு, அழகுவேல்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலியை கண்டித்து எடப்பாடி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: சாலையை மறித்து பந்தல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: