கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை, தமிழிசை சந்திப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 9 பேர் ராஜ்பவனுக்கு நேற்று சந்திக்க சென்றனர். அப்போது, ஆளுநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய மரணம் குறித்து கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தனர். மேலும், விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். ‘கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, தமிழக பாஜ மூத்த தலைவர்களுடன் இணைந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தோம்’’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

The post கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை, தமிழிசை சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: