விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக கள்ளக்குறிச்சியில் மக்களை சந்திப்பார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: கள்ளக் குறிச்சி விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக கள்ளக்குறிச்சிக்கு செல்வார், மக்களை சந்திப்பார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராது நடந்த ஒன்று. இதில் கடந்த ஆட்சியில் நடந்தது போல இல்லாமல் மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி ஆதாயம் தேடுவதற்கு தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில் மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதனுக்கு கள்ளச்சாராயம் விற்றது தெரியாதா?. சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும் என ஒத்துக்கொள்கிறார். ஆனால் காவல்துறை, பத்திரிகைகள், முதலமைச்சரிடமோ அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தாரா? ஏன் அப்படி செய்யவில்லை. அவருக்கு தெரியும். அவரும் இதற்கு உடந்தை தானே? அப்படி தெரிவித்திருந்தால் முதல்வரின் கவனத்திற்கு வந்திருக்கும், உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்.

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்குகிறார்கள். திமுகவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கு என்கிறார்கள். பாஜவை சார்ந்தவர்க்கு இதில் தொடர்புள்ளது. நீங்கள் ஆளுகிற பாண்டிச்சேரி, ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். சம்பவம் நடந்த அடுத்த நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த பிறகு இவ்வளவு சாராயம் பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார்.

இதன் மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறாரா?. கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் நன்றாக தெரியும். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்த பட்டியல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன. பாஜ ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திலும், குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோதும் 130 பேர் விஷச்சாராயம் குடித்து இறந்தார்கள். அதற்கும் ஏன் சிபிஐ விசாரணை போடவில்லை. கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்த நிகழ்வில் அவ்வளவு மக்கள் இறந்தார்களே அதற்காக ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?. எடப்பாடி பழனிசாமி மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.

ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பார்ப்போம். கமலாலயம் பாஜவின் பெரிய தலைமையகம், ஆளுநர் மாளிகை சின்ன கமலாலயம். முதலமைச்சர் நிச்சயமாக கள்ளக்குறிச்சிக்கு செல்வார், மக்களை சந்திப்பார். தவறு நடந்திருக்கிறது அதற்குரிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும். அதுதான் செய்யப்படும் வேற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கு தான் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.”திருடனாய் பார்த்து திறந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற எம்ஜிஆர் பாடல் போல ”குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது’’. இவ்வாறு அவர் கூறினார்.

The post விவகாரத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக கள்ளக்குறிச்சியில் மக்களை சந்திப்பார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: