பாஜகவில் இருந்து நீக்கியது ஏன்? இந்த தம்பியின் மறுமுகத்தை அண்ணாமலை பார்ப்பார்: திருச்சி சூர்யா மீண்டும் சவால்

சென்னை: அண்ணாமலைக்கு கழுத்தறுப்பது கை வந்த கலை. இந்த தம்பியின் மறுமுகத்தை அவர் பார்ப்பார் என்று திருச்சி சூர்யா சவால் விடுத்துள்ளார். தமிழிசை குறித்து விமர்சனம் செய்ததால் கட்சியில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். அதன்பின்னர் தினமும் பாஜவில் நடக்கும் பிரச்னைகள் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். நேற்றுமுன்தினம் முன்னாள் ஆளுநர் தமிழிசை குறித்து விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த
நிலையில், நேற்று காலை அண்ணாமலைக்கு சவால் விட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன, என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜ வேண்டாம். வேண்டவே வேண்டாம். என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜ வளராமல் பார்த்துக்கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன்.

என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதி வீரர்களுக்கு பாஜவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?. அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும். அதிகபட்சம் அமர் பிரசாத்தையும், கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே…எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

The post பாஜகவில் இருந்து நீக்கியது ஏன்? இந்த தம்பியின் மறுமுகத்தை அண்ணாமலை பார்ப்பார்: திருச்சி சூர்யா மீண்டும் சவால் appeared first on Dinakaran.

Related Stories: