உமக்கு நான் சுமையாய் போனதேன்?

வயது முதிர்ந்து விட்டது. மக்களோ கவனிக்கவில்லை. காட்டிற்குப் போய் விறகு வெட்டிப் பிழைக்கும் நிலையில் இருந்தார் அந்தக்கிழவர். ஒருநாள் வழக்கம்போலக் காட்டிற்குச் சென்று விறகு வெட்டினார். விறகுகளைக் கட்டாகக் கட்டி தலைமேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வழிநடந்தார். களைப்பு மேலிட்டது. விறகுச்சுமையை இறக்கி வைத்துவிட்டுத் தன் நிலையை எண்ணி வருந்தினார். இப்படித் துன்பப்படுவதைவிட சாவதே மேல் என எண்ணி வேதனையில் சாவை அழைத்தார். சாவும் ஒரு நொடியில் ஓடி வந்தது. தன்னை அழைத்ததற்கான காரணத்தைக் கேட்டது.

கிழவர் பதறிவிட்டார். அதற்குள் அவரின் மனமும் மாறிவிட்டது. உயிரைவிட விருப்பம் இல்லை. ஆதலால், சமாளித்தபடி தன்னைத்தேடி வந்த சாவிடம், இந்த விறகுச் சுமையைத் தூக்கி தலைமேல் வைக்க உதவிக்கு ஆள் யாரும் இல்லை, ஆதலால், உன்னை அழைத்தேன். இந்த விறகுக்கட்டைத் தூக்கி என் தலைமேல் வைத்துவிட்டுப் போ என்றார் கிழவர். ‘‘யாருக்குத்தான் உயிர்மேல் ஆசை இருக்காது?’’

சிறிது துன்பம் வந்தாலும் அதைப் பொறுக்க முடியாமல் ‘சாவு வராதா’ என்று கூறி வேதனை அடைகிறோம். சாவு நெருங்கி வருகிறது என்றாலோ, இன்னும் சிலநாள் உயிரோடு இருக்க மாட்டோமா என எண்ணி ஏங்குகிறோம். எவ்வளவுதான் வயதானாலும் இன்னும் சில நாட்கள் உயிரோடு வாழ்ந்திருக்கவே விரும்புகிறோம்.

‘‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே? அவர்களின் நாட்கள் கூலியாட்களின் நாட்களைப் போன்றவைதானே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்கு காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன. இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காகின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும் வரை புரண்டு உழல்வேன். புழுவும், புழுதியும் போர்த்தின என் உடலை வெடித்தது என் தோல், வடிந்தது சீழ்.

என் நாட்கள் தறியின் ஓடு கட்டையினும் விரைந்தோடுகின்றன. அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறும் காற்றே என்பதை நினைவு கூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணாது. என்மேல் உம் கண்கள் இருக்கும்; நானோ இரேன். கார்முகில் கலைந்து மறைவதுபோல் பாதாளம் செல்வோர் ஏறி வாரார். இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார். இனி அவர்களது இருப்பிடம் அவர்களை அறியாது. ஆகையால், நான் என் வாயை அடக்க மாட்டேன். என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன். உள்ளக் கசப்பில் முறையிடுவேன். கடலா நான்? அல்லது கடலின் பெரு நாகமா? ‘‘காவல் என்மீது வைக்கலானீர். என் படுக்கை ஆறுதல் அளிக்கும். என் மெத்தை முறையீட்டைத் தணிக்கும். என் கனவுகளால் என்னைக் கலங்க வைக்கின்றீர். காட்சிகளால் என்னைத் திகிலடையச் செய்கின்றீர். ஆதலால் நான் குரல்வளை நெறிக்கப் படுவதையும், வேதனையை விடச் சாவதையும் விரும்புகின்றேன்.

வெறுத்துப்போயிற்று; என்றென்றும் நான் வாழப்போவதில்லை. என்னை விட்டுவிடும். ஏனெனில் என் வாழ்நாட்கள் காற்றுப்போன்றனவே! மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள் மேல் வைக்க? காலைதோறும் நீர் அவர்களை ஆய்ந்தறிய 7 மணித்துளி தோறும் அவர்களை சோதிக்க? எவ்வளவு காலம் என்மீது வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக்கூட என்னைவிட மாட்டீரா? மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் சுமையாய்ப்போனதேன்? இப்பொழுதோ நான் மண்ணுக்குள் உறங்கப் போகின்றேன். நீர் என்னைத் தேடுவீர். நான்
இல்லாது போவேன்.’’ (யோபு 7:121)

– ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ.

The post உமக்கு நான் சுமையாய் போனதேன்? appeared first on Dinakaran.

Related Stories: