புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் இருப்பது தமிழக மக்களுக்கு பெருமை: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் இடம்பெற இருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கோல் என்பது நேர்கோல் ஆகும். செங்கோல் என்பது அரசு சின்னங்களுள் ஒன்றாக போற்றப்பட்டது. ஒரு மன்னனுக்கு மகுடமும், அரியணையும் எப்படி முக்கியமோ, அதுபோல் செங்கோலும் இன்றியமையாதது. தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதிய மன்னரின் கரங்களில் செங்கோலை அளித்து ராஜகுரு ஆசிர்வதிப்பது மரபு. நீதிநெறி வழுவாமல் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் இந்த செங்கோல்.

இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோல், இந்திய பிரதமரால் திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் இருப்பது தமிழக மக்களுக்கு பெருமை: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: