திருவொற்றியூர் தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் அரசு கண்காணிக்க வேண்டும்: பேரவையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் (திமுக) பேசுகையில், ‘‘திருவொற்றியூர் தொகுதியிலுள்ள திருவொற்றியூர், மணலி, எண்ணூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் அரசு கண்காணிக்க முன்வருமா.’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: மணலி – எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துணர்வு நிறுவனம் என்ற சிறப்பு நோக்க நிறுவனம் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய அரசாணை முதல்வரால் 15-3-2024 அன்று வெளியிடப்பட்டு, அதனை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனமானது, மணலி மற்றும் எண்ணூர் பகுதிகளை பசுமையாக்கும் நடவடிக்கைகள், சமூக உட்கட்டமைப்பு மேம்பாடு, நீர்நிலை பாதுகாப்பு, சதுப்பு நில மறுசீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகள் ஆகிய பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 24 மணி நேரமும் அவரச கால மையம் அமைப்பதற்கும், புதிய சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகமும், 2 பறக்கும் படைகளும் அந்தப் பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கே.பி.சங்கர்: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டபோது சென்னையே மூழ்கியது. அப்போது, சிபிசிஎல் நிறுவனத்தின் ஆயில் கசிவு கசிந்து வெளியே வந்து கொசஸ்தலை ஆற்றை முழுவதும் நாசம் செய்தது. சிபிசிஎல் கம்பெனிக்கும், கொசஸ்தலை ஆற்றுக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருக்கிறது. அந்த 10 கிலோ மீட்டர் தூரமும் பக்கிங்காம் கால்வாய் வழியாக தான் அந்த ஆயில் கழிவு வந்தது. எனவே, அந்த பக்கிங்காம் கால்வாயை தூர்வார கோரிக்கை வைத்தோம்.

ஆனால் இதுவரை நடைபெறவில்லை. இடிபிஎஸ்-லிருந்து சுடுதண்ணீர் அந்த ஆற்றுக்குள் வருகிறது. முதலில் கடலரிப்பு தான் இருந்தது. இப்போது ஆறு அரிப்பு வருகிறது. இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் மெய்யநாதன்: முதல்வரின் கவனத்திற்கும், நீர்வளத் துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்று, உறுப்பினரின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post திருவொற்றியூர் தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் அரசு கண்காணிக்க வேண்டும்: பேரவையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: