தகுதியற்றவர்களுக்கு பணம் பட்டுவாடா; மகாராஷ்டிராவில் மகளிர் நிதி உதவி திட்டத்தில் மோசடி: துணை முதல்வர் அஜித்பவார் ஒப்புதல்


மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்கும் லட்கி பகின் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியில்லாத லட்சக்கணக்கான பெண்கள் பலன் பெற்றது தெரிய வந்ததையடுத்து அவர்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்கி பகின் திட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாதம்தோறும் பணம் பெற்று வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3.58 கோடி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பட்நவிஸ் கூறினார். இந்நிலையில் பாராமதியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான அஜித்பவார் கூறுகையில், லட்கி பகின் திட்டம் அறிமுகப்படுத்தியபோது விண்ணப்பங்களை ஆய்வு செய்ய போதுமான நேரம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் விரைவில் வந்ததால் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய முடியவில்லை.

ஆனால் நாங்கள் ஏற்கனவே தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தோம். லட்கி பகின் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றவர்களிடம் இருந்து பணம் திரும்பப்பெற மாட்டாது என்றார். இதுகுறித்து உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், நிதித்துறையில் இருந்து நேரடியாகப் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஓட்டுக்காக அரசு பணத்தை கொள்ளையடித்ததை மன்னிப்பதை ஏற்க முடியாது. அஜித்பவார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

The post தகுதியற்றவர்களுக்கு பணம் பட்டுவாடா; மகாராஷ்டிராவில் மகளிர் நிதி உதவி திட்டத்தில் மோசடி: துணை முதல்வர் அஜித்பவார் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: