வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்த அயலக தமிழர்களுக்கு உற்சாக வரவேற்பு

*கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தென்காசி : வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலக தமிழர் வாழ் மாணவ-மாணவிகளை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் வரவேற்றார்.
வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் அயலக தமிழர் வாழ் மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்த அயலக தமிழர் வாழ் மாணவ, மாணவிகளை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயலகத்தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக “வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத்திட்டத்தினை அறிவித்து, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் இரண்டாம் கட்டபயணமாக தற்போது தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 இளைஞர்கள், உகாண்டாவில் இருந்து 3 இளைஞர்கள், குவாடலூப்வில் இருந்து 2 இளைஞர்கள், மார்டினிக்வில் இருந்து 3 இளைஞர்கள், பிஜீவில் இருந்து 12 இளைஞர்கள், இந்தோனேஷியாவில் இருந்து 9 இளைஞர்கள், மொரிஷியஸில் இருந்து 13 இளைஞர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 இளைஞர்கள், மாலத்தீவில் இருந்து 1 இளைஞர், கனடாவில் இருந்து 9 இளைஞர்கள், மியான்மரில் இருந்து 14 இளைஞர்கள், மலேசியாவில் இருந்து 4 இளைஞர்கள், இலங்கையில் இருந்து 9 இளைஞர்கள், பிரான்ஸில் இருந்து 3 இளைஞர்கள் மற்றும் ஜெர்மனியில் இருந்து 1 இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத்தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து பயணத்தை துவக்கினர்.

இப்பயணக்குழுவினர் நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்து, குற்றாலம் ஐந்தருவி இசக்கி தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு குற்றால அருவி, பழையகுற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடினர். மேலும், சித்த மருத்துவம் மற்றும் வர்மக்கலை பற்றிய பயிற்சி பட்டறை வகுப்புகளும் நடத்தப்பட்டது.

இந்த பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாசாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள். இப்பயணத்தின் கடைசி நாளான 15.08.2024 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) லாவண்யா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், அயலக தமிழர்நலன் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் புகழேந்தி, அசோக் குமார், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் (தென்காசி) வெங்கடேஷ், குடிமைபொருள் பறக்கும்படை தனி வட்டாட்சியர்(தென்காசி) அரவிந்த், வருவாய் வட்டாட்சியர் (தென்காசி) மணிகண்டன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அயலக தமிழர் வாழ் மாணவ -மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

The post வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்த அயலக தமிழர்களுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: