அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மற்றும் இதே வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஆகிய அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது,’இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் அமலாக்கத்துறை காவல்துறை அதிகாரிகள் போன்று செயல்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி கைது என்பது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின்னர் தான் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த விஷயத்தில் நேரடியாக கைது நடவடிக்கையை எந்தவித ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத்துறை எடுத்துள்ளது. குறிப்பாக ஒரு கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை நேரடியாக கைது செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. அதே நிலை தான் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கும். அந்த துறைக்கு கைது செய்யும் அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கும் போது செந்தில் பாலாஜியை எப்படி கைது செய்தார்கள்.

அமலாக்கத்துறையை பொறுத்தமட்டில் ஆதாரங்கள், ஆவணங்கள், சட்ட விரோத சொத்துக்களை முடக்குவது ஆகியவைக்கு மட்டும் தான் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கும் போது நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிறையில் சென்று வேண்டுமானால் விசாரிக்கலாம். அதைவிடுத்து கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அதிகாரம் கிடையாது என வாதிட்டார். இதையடுத்து அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியை விசாரிக்கும் காலக்கெடு ஆகஸ்ட் 14ம் தேதியோடு நிறைவடைய உள்ளது என நீதிபதிகள் முன்னிலையில் தகவலை தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: