கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு

மும்பை: மும்பையில் கார் மோதி பெண் பலியான சம்பவத்தில் சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சிவசேனா தலைவரின் மகன் தலைமறைவானார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள அட்ரியா மால் அருகே நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த கார் முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் அதில் பயணம் செய்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காவேரி நாக்வா (45) என்ற அந்த பெண் மட்டும் கார் பானட்டில் சிக்கிக் கொண்டு 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூசன் படகுத் துறையில் அந்த தம்பதி மீன்களை வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர், சிவசேனா (ஷிண்டே) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜேஸ் ஷா என்பது உறுதியானது. சம்பவத்தின் போது அந்த காரில் அவரது மகன் மிகிர் ஷாவும், ராஜேந்திர சிங் விதாவத்தும், ஓட்டுநரும் இருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மிகிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா, ராஜேந்திர சிங் விதாவத் ஆகியோரை கைது செய்துள்ளோம். இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டனர். பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக இருக்கும் மிகிர் ஷாவை 6 தனிப்படை தேடி வருகிறது’ என்றனர்.

 

The post கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: