நவம்பர் மாதத்திற்கு பின்னர் அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நீடிக்க மாட்டார்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உத்தரவாதம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு 3 முறை பதவி நீட்டிப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமைநீதிபதி சந்திரசூட், நீதிபதி பிஆர் கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’இந்த அதிகாரி எந்த மாநிலத்தின் டிஜிபி அல்ல. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை போன்ற ஒரு அமைப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரியாக இருக்கிறார். இந்த நீதிமன்றம் அவரது பதவிக்காலத்தில் தலையிடக்கூடாது.

ஏனெனில் நவம்பருக்கு பின்னர் அவர் அங்கு இருக்க மாட்டார். பணமோசடி தொடர்பான சில முக்கியமான விசாரணைகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் தேசத்தின் நலனுக்காக அவரது பதவி நீட்டிப்பு தேவைப்பட்டது. அவர் இன்றியமையாதவர் அல்ல. நிதிநடவடிக்கை பணிக்குழு அவரது வழிகாட்டுதல் பேரில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனால் நவம்பருக்கு பின்னர் அவர் பதவியில் நீடிக்க மாட்டார்’ என்றார். இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்து விட்டதாக நீதிபதிகள் அறிவித்து வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post நவம்பர் மாதத்திற்கு பின்னர் அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நீடிக்க மாட்டார்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உத்தரவாதம் appeared first on Dinakaran.

Related Stories: