மதுரை விமான நிலையத்தில், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கூறியதாவது: அமித்ஷா மட்டும்தான் திரும்ப, திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்லி வருகிறார். இதுவரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனம் காத்தார். தற்போது அவர் ‘கூட்டணி ஆட்சி இன்று இல்லை; அதிமுக அதற்கு உடன்படாது’ என்கிற விடையை பாஜவினருக்கு தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுகவை, திமுக தலைமையிலான கட்சியினர் கபளீகரம் செய்ய முயற்சிக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது. கூட இருக்கிற கட்சிகளால் மட்டும் தான் விழுங்குகின்ற முயற்சியை மேற்கொள்ள முடியும். எனவே, அந்த கருத்தும் பாஜவுக்கு எதிராக அவர் சொல்லியிருக்கிறார் என்று தான் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாஜவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ முயன்றது என்கிறாரா எடப்பாடி?: திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.
