விதவிதமான விளக்குகள்

அகல் விளக்குகள்

குழிவான கிண்ணம் போன்ற சிறிய மண்பாத்திரங்களே அகல் எனப்பட்டன. இவற்றின் விளிம்பில் திரியை அமைக்கும் வண்ணம் மூக்கு போன்ற அமைப்பு இருக்கும். இதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவர். ஒளியின் தேவைக்கேற்ப பல வரிசைகளாக அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கார்த்திகை தீபநாளில் இப்போதும் மண்ணாலான அகல் விளக்குகளை ஏற்றுவதே சிறப்பாகக் கருதப்படுகிறது. மண் அகல்களில் எண்ணெய்ப் பிசுக்கு ஏற்பட்டு கருப்பாக ஆகிவிடுவதாலும் எளிதில் உடைந்து விடுவதாலும், இரும்பு, வெண்கலம், பித்தளை ஆகியவற்றால் செய்த அகல் விளக்குகள் வழக்கத்தில் வந்தன. சிறப்புப் பூஜைகளின் போது மண்ணாலான அகல்களில் விளக்கேற்றி வழிபடுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

நிலை விளக்குகள்

அகல் விளக்குகளைத் தரையில் ஏற்றி வைத்தால் வெளிச்சம் குறைவான இடத்தில் மட்டுமே இருக்கும் என்பதால், உயரமான இடத்தில் வைக்க விரும்பினர். அடிபருத்த மரத்தண்டின் உச்சியில் வட்டமான மரத்தட்டை பொறுத்தி அதன் மீது அகல்களை வைத்தனர். அதன் வளர்ச்சியே இப்போது நாம் காணும் குத்து விளக்குகளாகும். மரத்தட்டில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கைகளில் அகல்களை ஏற்றி வைத்தனர். பின்னாளில் உலோக விளக்குகள் வழக்கத்திற்கு வந்த போது ஒரே தட்டில், விளிம்பில் திரியிடுவதற்கு ஏற்ப சற்று உட்குழிகளை அமைத்தனர். இதுவே பல முகங்களைக் கொண்ட விளக்குகளாக வளர்ந்தது. இந்த அமைப்பிலிருந்தே கிளைவிளக்குகள், விருட்ச தீபங்கள் யாவும் வளர்ந்தன.

கிளை விளக்கு

நடுவில் உள்ள நிலை விளக்கிலிருந்து நான்கு பக்கமும் கிளைத்துச் செல்வது போல் அமைந்திருப்பதால் இவை கிளை விளக்குகள் என அழைக்கப்படுகின்றன. நடுவில் ஒன்றும் பக்கவாட்டில் இரண்டு, நான்கு ஆறு என்ற வகையில் கிளைத்துச் செல்லும் விளக்குகளை இறைவன் முன்புறம் வைக்கும் வழக்கம் உள்ளது. கேரளத்தில் கிளைவிளக்குகள் அதிக அளவில் ஏற்றப்படுகின்றன. இவை விருட்ச தீபத்தின் முன்னோடிகளாகும்.

குத்துவிளக்கு

நடைமுறையில் வட்டமாக அடிப்பாகத்துடன் நீண்ட தண்டு ஐந்து அல்லது ஏழு முகங்களும் உச்சியில் பூவுடன் (அன்னம் / லட்சுமி) கூடிய விளக்கைக் குத்து விளக்கு என அழைக்கிறோம். இவை நிலை விளக்குகள் வகையைச் சேர்ந்ததாகும்.

மாவிளக்குகள்

அரிசிமாவை வெல்லம், இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி இதன் மேற்பக்கத்தைக் குழிப்பர். இப்படி இரண்டு உருண்டைகளைச் செய்து குழிகளில் நெய்விட்டு அதில் தாமரைத் தண்டு திரியினால் விளக்கேற்றுவர். இவற்றை ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் சுவாமி முன்னிலையில் வைத்து வணங்குகின்றனர். இவை மாவிளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் அம்பிகை ஆலயங்களில் மாவிளக்குகள் ஏற்றப்படுகின்றன. மாவிளக்கை ஏற்றுவதால் உடல் நோய்கள் நீங்கி தேக சுகம் உண்டாகும் என்று நம்புகின்றனர்.

தேங்காய் விளக்குகள்

தேங்காயைச் சமபாதியாக உடைத்து அம்மூடிகளில் நெய்விட்டு விளக்கேற்றுகின்றனர். இது சிறு தெய்வ வழிபாட்டில் அதிகம் காணப்படுகிறது.

எலுமிச்சைப் பழ விளக்குகள்

எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி சாறைப் பிழிந்துவிட்டு மூடியை எதிர் புறம் திருப்பி அம்மூடியில் நெய் நிறைத்து விளக்கேற்றுகின்றனர். துர்கை சந்நதியில் இவ்வகை விளக்குகள் அதிகளவு ஏற்றப்படுகின்றன. இப்படி ஏற்றுவதால் வறுமை விலகும். தடைப்பட்ட திருமணம் விரைவாக நிகழும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம் என்று நம்பப்படுகிறது. இவற்றைச் “சுவர்ணதீபம்’’ என்றும் அழைப்பர்.

தொகுப்பு : ராதாகிருஷ்ணன்

The post விதவிதமான விளக்குகள் appeared first on Dinakaran.

Related Stories: