பனிப்பொழிவால் காய்ந்து வரும் செடி, கொடிகள்

*கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஊட்டி : உறைபனி காரணமாக புற்கள் காய்ந்து வருவதால் கால்நடைகளுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஓட்ஸ் பசுந்தீவனம் பயிரிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுக்கு முன்பு கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்து வந்தது.காலப் போக்கில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் குறைந்தது,நீரோடைகள் சுருங்கியது, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக இருந்த ஓடை புறம்போக்கு நிலங்கள் கட்டிடங்களாக மாறியது மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் பால் கொள்முதல் அளவும் கணிசமாக குறைந்தது.இதனால் சமவெளி பகுதி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேணடிய நிலை உள்ளது.இருப்பினும் நீலகிரி மாவட்ட கிராம பகுதிகளில் மாடு வளர்ப்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் உறை பனிப்பொழிவு காரணமாக செடி,கொடிகள், தேயிலை செடிகள் போன்றவை காய்ந்து வருகின்றன.இதனால் ஆடு, மாடுகளின் முக்கிய உணவான புற்கள், சிறு செடிகள் கருகி காய்ந்துள்ளன.இம்முறை உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் புற்கள் கடுமையாக காய்ந்துள்ளது.

இதனால் ஆடு, மாடு, எருமை போன்வற்றிற்கு உணவு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. சமவெளி பகுதிகளில் இருந்து வைக்கோல்,சோளதட்டை போன்ற தீவனங்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது.மேலும் ஊட்டி அருகேயுள்ள தலையாட்டிமந்து,பிங்கர்போஸ்ட், பட்பயர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்ஸ் எனப்படும் பசுந்தீவனம் வளர்க்கப்பட்டு வருகிறது.
இவற்றை கால்நடைகள் வளர்ப்போர் வாங்கி சென்று கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.

இதனிடையே ேம மாதம் வரை கோடை காலம் என்பதால் கால்நடைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் உலர் தீவனங்கள் பெற்று மானிய விலையில் வழங்கிட கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பனிப்பொழிவால் காய்ந்து வரும் செடி, கொடிகள் appeared first on Dinakaran.

Related Stories: