கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!!

சென்னை: கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 2023ஆம் ஆண்டு சிறந்த செயல்பாடுகளுக்காக தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சங்கங்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

முதலமைச்சரின் நல்லாசியோடு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம்-“வானவில்” கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் பணியாளர் மற்றும் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மூலம், தமிழ்நாட்டில் பல்வேறு நிலையில் 2023ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறந்த சங்கங்களுக்கான கேடயம், சான்றிதழ் மற்றும் முதல் பரிசுக்கு ரூ.25,000/- இரண்டாம் பரிசுக்கு ரூ.20,000/- மதிப்பில் காசோலைகளையும் வழங்கி கௌரவித்தார்கள்.

இதில், தொடக்க நிலை கூட்டுறவுச் சங்கங்கள் வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி முதல்பரிசினையும், திருப்பத்தூர், புதூர்நாடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இரண்டாம் பரிசினையும் பெற்றது. முக்கிய பிரிவுகள் வகையில், சேலம், சேகோசர்வு தொழிற் கூட்டுறவுச் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் முதல் பரிசினையும், செங்கல்பட்டு மாவட்டம், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் மற்றும் ஈரோடு மாவட்டம், சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் இரண்டாவது பரிசினையிம் பெற்றது.

மேலும், மகளிர் பிரிவு வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், அம்மன் மகளிர் பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் முதல் பரிசினையும், ஈரோடு மாவட்டம், அஞ்சுகம் மகளிர் தொடக்க மற்றும் தொழில் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இரண்டாம் பரிசினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜே.விஜயராணி, இ.ஆ.ப., தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் எஸ்.சுப்ரமணியன், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மண்டல இணக்குநர் திரு.எம்.சுப்ரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!! appeared first on Dinakaran.

Related Stories: